Thursday, October 7, 2021

பன்டோராவினதும் நிருபமாவினதும் பெட்டிகள் (Pandora's box and Nirupama's box)

 



Pandora's Box

பன்டோரா (pandora) என்பது ஒரு பெண்ணினுடைய பெயராகும். இவள் கிரேக்க புராண கதைகளில் புகழ் பெற்றவளாவாள். கிரேக்க கதைகளின் படி, உலகின் முதலாவது பெண்ணாக பண்டோரா கருதப்படுகிறாள். கிரேக்கத்தின் பெருங்கடவுளான சியஸ் மனிதர்களை பழிவாங்குவதற்காக இப்பெண்ணை உருவாக்குகிறான். ஏனென்றால் நாங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம் ப்ரோமதியஸ் (Prometheus) எனும் டைட்டன் சொர்க்கத்திலிருந்து மனிதர்களுக்கு நெருப்பை கொண்டு வந்து தந்தான் என்று. நெருப்புதான் கடவுளிடம் இருந்த மிகப்பெரிய பொக்கிஷம். இதனால் கோபமடைந்த சியஸ் உலகத்தின் மூலையில் ப்ரோமதியஸை கட்டிவைத்தான். மேலும் அவனது குடலை கிழித்துச் சாப்பிட பருந்தையும் உருவாக்கினான். இந்த பருந்து பகல் நேரங்களில் ப்ரோமதியஸின் குடலை கிழித்து சாப்பிடும். இரவு நேரங்களில் மீண்டும் ப்ரோமதியஸின் குடல் பழைய நிலைக்கு திரும்பும். காரணம் என்னவென்றால், ப்ரோமதியஸ் ஒரு டைட்டன். அதாவது பாதி தெய்வமும் பாதி மனிதனும் சேர்ந்த படைப்பு. எனவே, டைட்டன்களை கொல்ல முடியாது. அதனால் மனிதர்கள் மீது இரக்கப்பட்டு கடவுளின் நெருப்பை தருவித்து கொடுத்தமையினால் ப்ரோமதியஸ் தண்டிக்கப்படுகிறான்.
நெருப்பு கிடைப்பதற்கு முதல் மனிதர்கள் கற்குகைகளில் இருக்கின்ற எலிகளை போல்தான் வாழ்ந்தார்கள். ஆனால் நெருப்பானது மனித நாகரிகத்தை மாற்றமடையச் செய்தது. உணவை சமைத்து சாப்பிடவும், மண்ணை உருக்கி பொன்னாக்கவும், மண்வெட்டி, வில், அம்பு, ஈட்டி போன்றவற்றை உருவாக்கவும் மனிதனால் முடிந்தது. கற்குகைளில் புதைந்து கிடந்த மனிதர்கள் விடுதலை பெற்று புதிய மனித நாகரிகத்தை கட்டியெழுப்பிய மகிழ்ச்சியில் திளைத்திருந்த போது, நெருப்பை கொண்டு வந்த ப்ரோமதியசுக்கும் அதனை பயன்படுத்திய மனிதர்களுக்கும் பாடம் புகட்ட சியஸ் கடவுளும் அவரை சார்ந்தோரும் எண்ணுகிறார்கள். எனவேதான், பன்டோரா என்ற அழகிய மனித குல பெண்ணை இவர்கள் உருவாக்குகிறார்கள். அவளுக்கு போரின் தெய்வமான அதீனா, தெய்வ அங்கிகளை அணிவிக்கிறாள். அவளுக்கு தலையில் கிரீடமும் அணிவிக்கப்படுகிறது. இவ்வாறாக பன்டோரா ஒரு தெய்வத்தை போல அலங்கரிக்கப்படுகிறாள். அவளது கையில் ஒரு சிறிய பெட்டியும் வழங்கப்படுகிறது.
அது வெறும் பெட்டியல்ல, உலகத்தின் தீமை, அழிவு, மரணம், பொறாமை, நோய் நொடிகள், பஞ்சம், தொற்றுகள் ஆகியவை நிறைந்த பெட்டியைதான் பன்டோரவிடம் ஒப்படைக்கிறார்கள். அதை அவள் கையில் கொடுத்து தெய்வம் சொல்கிறது “இதை நீ ஒருபோதும் திறக்கக்கூடாது” என்று. அப்படிச்சொன்னால் ஆர்வத்தின் காரணமாக கட்டாயம் பன்டோரா அதனை திறப்பாள் என்று தெய்வதுக்கு தெரியும். ஆகவே, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதை போல ப்ரோமதியஸின் சகோதரனான எபிமதியஸ் (Epimetheus) என்பவனிடம் பன்டோரா அனுப்பிவைக்கப்படுகிறாள். எபிமதியஸ் பன்டோராவை திருமணம் செய்து கொள்கிறான். பன்டோரா மனு உலகத்தில் வாழத்தொடங்கி சில நாட்கள் கழிந்த பின்னர், அவளுக்கு தெய்வம் தந்த பெட்டியினை திறந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தாலும் தெய்வத்தின் கூற்றுக்கு கட்டுப்பட்டு அதனை திறக்காமல் விடுவதற்கு தன் மனதை தயார்படுத்தி கொள்கிறாள். எனினும் ஒருநாள் பன்டோராவிற்கு இந்த பெட்டியினை திறந்து பார்க்க வேண்டும் என்ற அவா வெகுவாக எழுகிறது. பன்டோரா அந்த அற்புத பெட்டியின் மூடியினை திறக்கிறாள். தீமை, பொறாமை, மரணம், நோய்கள் போன்ற அனைத்தும் அந்த பெட்டியிலிருந்து வெளிக்கிளம்பி உலகெங்கும் பரவுகிறது. இதனை சற்றும் எதிர்பாராத பன்டோரா உடனே அந்த பெட்டியை மூடிவிடுகிறாள். எப்போதும் திறக்க முடியாதபடி அதனை மூடிவிடுகிறாள். ஆனால் பெட்டியில் கடைசியாக ஒன்று மட்டும் எஞ்சியிருந்தது. அதுதான் “நம்பிக்கை”

நிருபமாவின் பெட்டி
----------------------------------------
எவ்வாறாயினும் கடந்த சில நாடகளுக்கு முன் உலகத்தில் இன்னுமொரு பன்டோர பெட்டி திறக்கப்பட்டது. அதுதான் “பன்டோரா பத்திரிகை” (pandora papers). இப்பத்திரிகையினை, ICIJ (International Consortium of Investigative Journalists) என்ற ஊடகக்குழு உலகத்திற்கு பகிரங்கப்படுத்தியது. உலகத்தில் அவ்வப்போது இப்படியான இரகசிய பெட்டிகள் திறக்கப்படுவது உண்டு. ஜுலியன் அஸான்ஜின்னின் (Julian Assange) விகிலீக்ஸ், பனாமா அறிக்கை போன்றவை இதற்கு முன்னர் திறக்கப்பட்ட பெட்டிகளாகும். எட்வட் ஸ்னோவ்டன் (Edward Snowden) என்பவர் இதே போன்றதொரு பெட்டியை திறந்திருந்தாலும் அது இவற்றை விட சற்று மாறுபட்டதாக இருந்தது. அமெரிக்காவின் உளவுத்துறை தொடர்பான தகவல்கள் அடங்கியதாக அது இருந்தது. எப்படியாயினும் இவ்வாறனவற்றில் எமது நாட்டின் பெயர்களும் அடிப்படுவது வழக்கமானதொன்றாகும்.
இந்த முறை திறக்கப்பட்ட “பன்டோரா” பத்திரிகையில் நூற்றுக்கணக்கான நாடுகளின், தற்போது அரசியலில் ஈடுபடுகின்ற தேசத்தலைவர்களினதும், முன்னாள் தலைவர்களினதும், அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களினதும், நெருங்கியவர்களினதும், அரச அதிகாரிகளினதும், முன்னாள் அரச அதிகாரிகளினதும், பல்வேறு அமைப்பின் தலைவர்களினதும், அமைச்சர்களினதும், ஊடக தலைவர்களினதும், சட்டவல்லுனர்களினதும், வியாபாரிகளினதும் இன்னும் பலரினதும் தீமைகள் இவ்வுலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் பெரும்பாலானர்வகள் மிகவும் வறிய நாடுகளைச் சேர்ந்த ( இங்கிலாந்து மற்றும் செல்வந்த அரபு நாடுகள் சிலவற்றை தவிர்க்கவும்) மோசமான அரசியல்வாதிகளும் அரசியல் ஆதர்வாளர்களுமே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை, நாட்டு மக்கள் உள்ளாடை அணிவதை கூட விலக்கிக்கொள்ளச் செய்த, சர்வதேச ஊடகங்களில் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்ட, நாட்டு மக்கள் பயன்படுத்துகின்ற பருப்பு, சீனி, பால்மா, கேஸ் போன்றவற்றுக்கு அதிக வரி விதித்துகொண்டிருக்கின்ற இலங்கையின் பிரதிநிதியும் இதில் இருக்கிறார். அவர்தான் நிருபமா ராஜபக்ஷ
இந்த பெட்டியில் இருந்தவை, பன்டோராவின் பெட்டியிலிருந்த சாபங்கள் போன்றதல்ல. உலகத்தில் வாழ்கின்ற அப்பாவி வறிய மக்களிடமிருந்து கொள்ளையடித்து, சுரண்டி சாப்பிட்டு ஏப்பம் விட்ட பணக்காரர்களின் சட்டவிரோத பணத்தை அம்பலப்படுத்தும் 12 மில்லியன் கட்டுரைகள்.
நாங்கள் வேண்டுமென்றால் சிறுவயதில் விளையாடுவது போல “கிரேக்க பன்டேராவிற்கும்”, “நிருபமா பன்டேராவிற்கும்” இடையிலான ஏற்றத்தாழ்வுகள் எவை என்பதை நூற்றுகணக்கில் ஆராயலாம் என்றாலும் ஒரு சிலவற்றை பார்ப்போம்.
பன்டோர பத்திரிகை உலகத்திற்கு அம்பலபடுத்தியவைகள் ஒரு விதத்தில் கிரேக்கத்தின் பன்டோரா தீமையின் பெட்டியை திறந்ததற்கு ஒத்ததாகும். இன்னொரு விதத்தில் சற்று வித்தியாசமானதாகும். பன்டோரா பத்திரிகை இதுவரை மறைந்திருந்த தீமைகளை (ஒரு பகுதியினை) உலகத்திற்கு அம்பலடுத்தியது. பன்டோரா கதையில் நடந்தது போலவே, தங்களது நாடுகள் பற்றியும், எதிர்காலம் பற்றியும் ஏதேனும் “நம்பிக்கை” மக்களுக்கு இருந்திருந்தால், அதனை மறுபடி திறக்க முடியாதளவுக்கு பூட்டப்பட்டுவிட்டது. கிரேக்க பன்டோரா தனது அறியாமையால் இந்த உலகத்திற்கு தீமையை கொண்டு வந்து சேர்த்தவள். ஆனால் நிருபமா அப்படிபட்டவர் அல்ல. நிருபமா என்றாலே அது தீமைதான். மனிதர்களுக்கு தீமைகளை பரப்புவதற்காக பிற உலகத்தவர்களான கடவுள்கள் பன்டோராவை இவ்வுலகில் உருவாக்கினார்கள். ஆனால் நிருபமா போன்றவர்களை உருவாக்குவதும், அவர்களை நடாத்துவதும், எதிர்காலத்தில் நடாத்தபோவதும் அந்த தீமைகளுக்கு இரையான மக்கள்தான். இவர்களையே நாங்கள் நாட்டுபிரஜைகள் என்கிறோம்!
கிரேக்க பன்டோரா தனது பெட்டியில் தீமை இருப்பதை அறிந்திருக்கவில்லை. ஆனால் நிருபமா போன்றவர்கள் அதனை நன்கு அறிவார்கள். பன்டோராவி்ன் பெட்டி தீமையால் நிரம்புவது திருட்டுக்குக் கிடைத்த தண்டனையின் காரணத்தால் ஆகும். ஆனால் நிருபமாவின் பெட்டி திருட்டின் பயனாகும். தண்டைனையல்ல. இன்னொருவிதத்தில் பன்டோராவின் பெட்டியில் நிரம்பி கிடந்த தீமைகள் அவளுக்குச் சொந்தமானதல்ல. கடவுளால் இரகசியமாக போடப்பட்டு பூட்டப்பட்டதாகும். அதனை திறக்கும் ஆர்வம் மட்டுமே அவளுக்குரியதாகும். ஆனால், தீமையின் பெட்டியில் நிரப்புவதற்கு இருந்த ஆர்வத்தை போலவே நிருபமாவிடம் இருந்தது அவருக்கே உரித்தான தீமையாகும். (ஒருவேளை சொல்வதை போல, அவரது குடும்பத்தாருக்கு உரியதாக இருக்கலாம்.)
பன்டோரா பத்திரிகை தீமையின் – ஊழலின் முழு பிரதிபலிப்பல்ல. ஒரு சிறு பகுதியே வெளிவந்துள்ளது. அதேபோல, இந்த நாடுகளின் அனைத்து ஊழல்களும் பன்டோர ஆவணங்களில் இன்னும் வெளிப்படவில்லை என்பது தெளிவாகிறது.
இந்த பன்டோரா பத்திரிகை தொடர்பாக ICIJ, ஊடகவியலாளர்கள் எங்களது நாட்டின் பிரதிநிதி பற்றி இப்படி குறிப்பிடுகிறார்கள்
“Nirupama Rajapaksa is a cousin of Sri Lanka’s president, Gotabaya Rajapaksa, who rose to power during a brutal civil war. She is also a former member of Parliament and served as deputy minister of water supply and drainage from 2010 to 2015.
Her husband, Thirukumar Nadesan, has worked as a consultant and hotel entrepreneur, according to a biography on his company website. In 2016, he was charged with embezzlement in connection with a real estate deal involving another member of the president’s family Basil Rajapaksa, accused of using public funds to build a villa. The case is pending; Nadesan and Basil Rajapaksa, Sri Lanka’s current finance minister, have denied wrongdoing…”
அவரின் பெட்டியிலிருந்த வந்த செய்திகள் பற்றி மட்டுமே நமக்கு இப்போது தெரியும் என்பதை நாம் நினைவில் வைத்துகொள்வோம். இதில், வெளிப்படுத்தப்படாத பகுதிகள் இன்னும் இருக்கலாம் அல்லது இன்னொரு பிரிவினருக்கு இன்னொரு பத்திரிகை இருக்கலாம்.
ஆம், உண்மையில் நிருபமா உங்களுக்கு சொல்வதற்குண்டான உவமை என்னிடமில்லை..!

இக்கட்டுரையின் மூலம் சிங்களம் மொழிக்குரியதாகும்.

சிங்களத்தில் - Prasad Nirosha Bandara ப்ரசாத் நிரோஷ பண்டார (2021.10.04)
தமிழில் – இராசையா லோகாநந்தன் (2021.10.05)


No comments:

Post a Comment